பாலா - எங்கே செல்லும் இந்த பாதை??

January 17, 2016 , , 0 Comments

விகடனில், "நான் தான் பாலா " என்ற தலைப்பில் ரா.கண்ணன் தொகுத்த இயக்குனர் பாலாவின் சுயசரிதையைப் படித்தவர்களுக்கு, பாலாவின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றின அரிதல் இருக்கும்.. அதாவது அவரது வாழ்வில் " வன்முறை", "கீழ்மை" போன்றவை இளமையிலே அம்சங்களாக மாறி விட்டவை.. அதனாலேயே அவரது படங்களில் வழமையான சினிமாக்களில் காண்பிக்கப்படும் வன்முறையை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும்..


" வன்முறை" என்பது சாகச ரீதியாக, வில்லனை மோசமாக சித்திரிக்க, வன்முறை ஏவப்பட்டவர் மீது அனுதாபம் ஏற்பட என அது நாள் வரை பயன்படுத்தப்பட, பார்வையாளர்களுக்கு "அதிர்ச்சி மதிப்பீட்டையும்", களம் சார்ந்த உணர்ச்சிகளை முகத்திலடித்து சொல்ல பயன்படுத்தினார் பாலா..

"சேது" ஒரு தனி மனிதனின் காதல் / வாழ்க்கை, பின் பாண்டிமட வாழ்வியலை சொன்னது.. அப்போது விக்ரமின் தலையில் அடிபடும் காட்சி அதிர்ச்சியாகப் பார்க்கப்பட்டது.. பின்னர், "நந்தா" படத்தில் வரும் " கட்டிங் " சீனும் அதேரகம்.. "பிதாமகனி" ல் க்ளைமேக்ஸ் என.. ஆனால், அது வரை பாலா படத்தின் மீதியை உயிர்ப்புடன் காட்சிப்படுத்தியிருப்பார்.. அதன் ஊடே, நகைச்சுவையும் (இருண்மையானது தான்), கிறுக்குத் தனமான காதல் என இருக்கும். சுருக்கமாக சொன்னால், பிதாமகன் வரை இயல் வாழ்க்கையில் நடக்கும் உணர்ச்சி சிக்கல்கள், அதன் தீர்வு என " இயக்குனர் " அதிகாரத்தில் ஆளுமை செலுத்தினார்..

பிதாமகனில் சுடுகாட்டில் வாழ்ந்த சிறுவன், அதன் வரவேற்பு அவரை முற்றிலும் வேறு உலகிற்கு நகர்த்தி விட்டது.. அதன் பின், பாலா, தனி உலகத்தை படைக்கும் பாலாவானார்..

1. "நான் கடவுள்" - அகோரிகளின் உலகம் + " உருப்படிகளின் " வாழ்க்கை... யாரும் தொட முடியாத உலகத்தை செவிட்டில் அறைந்து கூறியது, பாவப்பட்டவர்களுக்கு "மரணமே " விடுதலை எனக் கூறியது என இந்திய அளவில் கவனிக்கப்படும் அளவிற்கு உயர்ந்தார்.. உருப்படிகளின் வாழ்க்கையை அதிர்ச்சியுடன் காட்ட அதீத வன்முறையை, குரூரத்தை பயன்படுத்தினார்..

2. " அவன் இவன்" - விளிம்பு நிலை மனிதர்களின் நீல நகைச்சுவை படம்.. ஆனால் அவரது "குரூர வன்முறை" படத்தின் தேவையை மீறி க்ளைமேக்ஸில் தெறித்து, நம்மை முகம் சுளிக்க வைத்தது..

3. "பரதேசி" - "எரியும் பனிக்காடு" நாவலை மீறி, அவரது அரசியல் பார்வையைத் திணித்து, அதன் சோகத்தை முகத்தில் அறைய சொன்னார்.. துளியளவு நம்பிக்கையைக் கூட கசக்கி எறிந்து மரண வேதனையைக் கண்ணில் காட்டினார்...

4. தாரை தப்பட்டை - கரகாட்டக்காரர்களின் அவல நிலையைக் கடந்து "வாடகைத் தாய் " அது சார்ந்த குரூத்தைத் திணித்தது மேற்சொன்ன " வன்ம" உந்துதலால் தான்..

தனக்கென தனி "உலக" ங்களைப் படைக்கத் தெரிந்த பாலா, அதில் தன் வழக்கமான பிறழ்வு மனம் கொண்ட நாயக, நாயகிகளைப் படைக்கத் தெரிந்து, அவர்களுக்கு அவலத்தைத் திணித்து, வன்முறையைத் தூவி, இறுதியில் கொடூர கொலைகளால் படங்களை முடிக்கிறார்..

ஜெயமோகன், எஸ்ரா, நாஞ்சில் நாடன் என எழுத்தாளர்களின் அருகாமையால் அவருக்கு "இலக்கிய" ஒளிவட்டமும் சேர்ந்து விட்டது...
திறமையான ஆளுமை பலம் கொண்ட அவர், அவரை மீறித் தொனிக்கும் வன்மத்தால் பார்வையாளர்களை அதிர்ச்சியைத் தாண்டின குலைதலுக்கு ஆளாக்குகிறார்..

எங்கே செல்லும் இந்த பாதை??

Dinesh


Bala's Filmography - http://bit.ly/1RNFcst

0 comments: